search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎன் நேரு"

    ஆட்சியாளர்கள் செய்யாத வேலைகளை செய்ததாக கணக்கு காட்டி வருமானம் பார்ப்பதில் தான் கவனமாக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு குற்றம் சாட்டியுள்ளார். #knnehru #dmk
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி, மருவத்தூர் ஊராட்சி அம்மம்பாளையம், முருகூர், வீரமச்சான்பட்டி ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு மக்களுக்காக செயல்படவில்லை. அமைச்சர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் செயல்படுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் பலமுறை மக்கள் நலன் கருதி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்க வில்லை.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றியிருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க. தோல்வி அடைந்துவிடும் என்ற பயத்தால் தேர்தலை நடத்தவிடாமல் செய்து வருகின்றனர். இதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  தொகுதி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள ஆட்சியாளர்கள் செய்யாத வேலைகளை செய்ததாக கணக்கு காட்டி வருமானம் பார்ப்பதில் தான் கவனமாக உள்ளனர். வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
    திருவாரூர் இடைத்தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் தேதி அறிவித்தாலும் அதனை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அதிமுக, தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குசாவடி முகவர் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதன்படி கொரடாச்சேரி நகர, ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, உ.மதிவாணன், முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன், தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் தி.மு.க. மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் கலியபெருமாள், தேவா, நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தாழை அறிவழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேசுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு பேசும்போது கூறியதாவது:-

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியானது தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் தொகுதியாகும். திருவாரூர் தொகுதிக்கு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பயன்தர தக்க பணிகளை தலைவர் கருணாநிதி செய்துள்ளார். வரவுள்ள இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எப்போது தேர்தல் அறிவித்தாலும் வெற்றியை எளிதாக பெறும் வகையில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விடவேண்டும். வாக்குசாவடி முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாக்காளர்களை சந்தித்து நமது வெற்றியை உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோரை திமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.

    இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்பி விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஒன்றிய, நகர, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இடைத்தேர்தலை சந்திப்பது குறித்து கருத்துகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பேசிய தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு பேசியபோது கூறியதாவது, திருவாரூர் சட்டமன்ற தொகுதி மறைந்த திமுக தலைவரை தமிழகத்தில் அதில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த தொகுதி, எனவே இடைத்தேர்தலில் அயராது பாடுபட்டு எந்த தயக்கமின்றி நேர்மையாக சந்தித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்க பாடுபடுவோம் என தெரிவித்தார். #thiruvarurelection #dmk

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 3-வது கட்டமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. #DMK #CBI #Ramajeyam
    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.வின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயணம் சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    சம்பவம் நடந்து 6 ஆண்டுகளை கடந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயம் மனைவி லதா, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்து 32 மாதங்களாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறோம். எனவே இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிமன்றம், 2015 ஜனவரி 8-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது. அதன்பின் விசாரணை சூடுபிடித்தது. ஆனாலும் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் சி.பி.சி.ஐ.டி.க்கு பல முறை கோர்ட்டு அவகாசம் அளித்தது. எனினும் இதில் முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


    இதைத்தொடர்ந்து திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் , முதல் கட்ட விசாரணையை கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி தொடங்கினார். ராமஜெயம் உடல் கிடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் மார்ச் மாதம் அதிகாரிகள் திருச்சி வந்து விசாரணை நடத்தினர். தற்போது கடந்த 16-ந்தேதி திருச்சி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அளித்த ஆவணங்களை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாக்கிங் சென்றதாக கூறப்படும் இடங்கள் மற்றும் வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 3-வது கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #CBI #Ramajeyam

    ×